×

நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் இரவோடு இரவாக சாலையை உடைத்து குழாய் பதிப்பு: போக்குவரத்து கடும் பாதிப்பு - மக்கள் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவிலில் திடீரென சாலையை தோண்டி குழாய் பதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அதிகாரிகளுக்கே தெரியாமல் இந்த பணி நடந்ததாக கூறப்படுகிறது. நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் சிபிஎச் மருத்துவமனை அருகே சாலையின் குறுக்கே சானல் செல்கிறது. இதனால் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு, ரோட்டில் பள்ளம் உண்டாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. மழை  காலங்களில் அடிக்கடி அந்த இடத்தில் சாலை பழுதாகி விடும். எனவே இங்கு சாலையின் குறுக்கே கல்வெட்டு பாலம் அமைக்க வேண்டும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி இந்த பகுதியில் கல்வெட்டு பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதே போல் புத்தேரி, இறச்சக்குளம் உள்பட இந்த ரோட்டில் 5 இடங்களில் கல்வெட்டு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில்  பார்வதிபுரம் மேம்பால பணிகள் நடப்பதால் தக்கலை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் மார்க்கங்களில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் களியங்காடு, இறச்சக்குளம், கணியான்குளம்  வழியாக  புத்தேரி வந்து, பின்னர் பாலமோர் ரோடு வழியாக வடசேரிக்கு வரும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாகவே இந்த சாலை வழியாக தான் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பாலமோர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஐயப்ப சீசன் காலம் தொடங்கும் சமயத்தில் இந்த  நெருக்கடி இரு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாலமோர் ரோட்டில் சிபிஎச் மருத்துவமனை அருகே கல்வெட்டு பாலம் அமைக்கும் பணியை தள்ளி வைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து இருந்தது.

 கலெக்டரிடம் அனுமதி பெற்ற பின்னரே பணி தொடங்குவோம்.  பார்வதிபுரம் பால பணி முடிவடைந்து போக்குவரத்து தொடங்கிய பின்னர் இந்த சாலை தோண்டப்படும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் நேற்று இரவு திடீரென ஜே.சி.பி. மற்றும் சிமெண்ட் குழாய்கள் கொண்டு வரப்பட்டு சாலையை இரவோடு இரவோக தோண்டினர். பின்னர் சாலையின் குறுக்கே இரும்பு குழாயை பதித்து மண் போட்டு சாலையை நிரப்பி  சென்று விட்டனர். வெறும் மணலை மட்டும் நிரப்பி இருப்பதால் அந்த சாலை தற்போது  பெரும் பள்ளமாகி விட்டது. இதற்கிடையே எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் பணி செய்தததால் டெலிபோன் கேபிள்கள் சேதம்  அடைந்து விட்டன என கூறி பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் வந்து மீண்டும் சாலையை தோண்டி கேபிளை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக பாலமோர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவசர கதியில் இந்த பணியை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இறச்சக்குளம்,  பூதப்பாண்டி, அருமநல்லூர், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் இந்த வழியாக தான் வர வேண்டும். மேற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய பஸ்கள் மற்றும்  வாகனங்களும் இதன் வழியாக தான் வருகின்றன.
 போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக இது உள்ளது. எனவே எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தோண்டி குழாயை பதித்து சாலைய நாசப்படுத்தி உள்ளனர் என்று பொதுமக்கள் தரப்பில் கூறி உள்ளனர். மேலும் குழாயை  பதித்து, வெறும் மணலை மட்டும் போட்டுள்ளனர். ஜல்லி கற்களை போட்டு சமன்படுத்தி அதன் பின்னர் சாலை அமைத்தால் தான் வாகனங்கள் செல்லும் போது சாலையை உடையாது என்று பொதுமக்கள் கூறினர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, உயர் அதிகாரி இல்ல திருமண நிகழ்ச்சிக்கான அனைத்து அதிகாரிகளும் மதுரைக்கு வந்து விட்டோம். நாங்கள் ஊரில் இல்லாத நேரம் பார்த்து கான்ட்ராக்டர் திடீரென வந்து  பணியை செய்துள்ளார். இது மிகப்பெரிய தவறு. நாங்கள் விசாரித்து நடவடிக்கைஎடுப்போம் என்றனர். நெடுஞ்சாலையில் பணியை தொடங்கும் முன் பொதுமக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் அவசர கதியில் சாலையை தோண்டி குழாயை பதித்து விட்டு, சாலையை சீரமைக்காமல் அப்படியே போட்டு  விட்டு செல்வது நியாயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pipeline road ,Nalgowil Palamore Road , Nagercoil, tube, transportation, people
× RELATED திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்..!!